செய்திகள்

இலவச அரிசியை விட்டு கொடுக்க வசதியானவர்கள் முன்வாருங்கள்: நாராயணசாமி வேண்டுகோள்

Published On 2017-05-31 15:35 IST   |   Update On 2017-05-31 15:35:00 IST
இலவச அரிசியை விட்டு கொடுக்க வசதியானவர்கள் முன்வாருங்கள் என புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

அன்பழகன்:- புதுவை மாநிலத்தில் எத்தனை குடும்பங்களுக்கு இலவச அரிசி மாநில அரசால் வழங்கப்படுகிறது.

அதற்கு மாதத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு? ஆண்டுக்கான செலவு எவ்வளவு? தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேரடி மானியத்தொகை மாநிலம் முழுவதும் எத்தனை நபருக்கு வழங்கப்பட்டது.

அதற்காக 2015-16ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு? 2016 ஜூன் முதல் மே வரை எத்தனை மாதம் மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது?

அமைச்சர் கந்தசாமி:- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

தற்போதைய ஒப்பந்த விலைப்படி ஆண்டுக்கு ரூ.252கோடி செலவாகும். மாதத்திற்கு ரூ.21 கோடி செலவாகிறது. 2016-17-ம் ஆண்டில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 6 லட்சம் பேருக்கு நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசு ரூ.46 கோடி நிதி வழங்கியுள்ளது. புதுவை, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் 8 மாதம் இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஏனாமில் 7 மாதம் வழங்கப்பட்டுள்ளது.

அன்பழகன்:- தற்போது ஒரு கிலோ அரிசி என்ன விலையில் வாங்கப்படுகிறது? மாநில விற்பனைக்கழகத்தின் மூலம் என்ன விலைக்கு வாங்கப்பட்டது?

கந்தசாமி:- தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.29.60 என தனியார் நிறுவனத்திடமும், ரூ.30.40 என மற்றொரு நிறுவனத்திடமும் கொள்முதல் செய்யப்படுகிறது. மாநில விற்பனை கழகத்திடம் ரூ.25.34 விலையில் பெறப்பட்டது.

அன்பழகன்:- ஒரு கிலோ அரிசி தற்போது ரூ.5 கூடுதலாக விலை கொடுத்து வாங்குகிறீர்கள். இதனால் அரசுக்கு ரூ.40 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது அவசியமா?

நாராயணசாமி:- தனிப்பட்ட முறையில் யாரிடமும் பேரம் பேசி அரிசி கொள்முதல் செய்யவில்லை.வெளிப்படையாக டெண்டர் மூலம் அரிசி வாங்கப்படுகிறது.

தற்போதைய சந்தை விலைப்படி குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அன்பழகன்:- ஏற்கனவே சிகப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மாநில அரசு சார்பில் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. கூடுதலாக மத்திய அரசு திட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் அரிசிக்கான பணம் செலுத்தப்படுகிறது. ஒரே பயனாளி இருமுறை பயன்பெறுகின்றனர்.

லட்சுமிநாராயணன்:- உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதை நம்மால் மாற்றவோ, தடுக்கவோ முடியாது.

அன்பழகன்:- அப்படியென்றால் நிதி நெருக்கடியாக உள்ளது என அரசு அங்கலாய்க்கக்கூடாது. அரிசி கிடைக்காத நேரத்தில் அனைவருக்கும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துங்கள்.

நாராயணசாமி:- பட்ஜெட்டிலேயே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள், நில சுவான்தார்கள், வணிகர்கள் என வசதி படைத்தவர்கள் இலவச அரிசியை விட்டுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

அவர்களுக்கு பச்சை நிற ரே‌ஷன் கார்டு வழங்கி கவுரவிக்கவும் அறிவிப்பு செய்துள்ளோம். இதற்கு முன்னுதாரணமாக நாம் இலவச அரிசியை விட்டுக்கொடுக்கலாம். இதற்கான நிதி ஏழைகளுக்கு வேறு திட்டங்களுக்கு செலவிடலாம். சபாநாயகரே இதுதொடர்பாக வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

கந்தசாமி:- ஒரே திட்டத்தில் இரண்டுமுறை பயனாளிகள் பயன்பெறுவதாக பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக அரசு நல்ல முடிவெடுக்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Similar News