திசையன்விளை அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
திசையன்விளை:
திசையன்விளை அருகே இட்டமொழியை அடுத்த ஏழாங்கால் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இன்று காலை இப்பகுதிக்கு விவசாயிகள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்கு ஒருவர் தலையில் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே இதுபற்றி விஜயநாராயணம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வர்ஜின் சேவியோ, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவர் அருகே மதுபாட்டில், பிஸ்கட் போன்றவை கிடந்தன.
நள்ளிரவு கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிசென்றது. கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.