செய்திகள்

மூட்டை தூக்கும் தொழிலாளி கொலை: பெண் என்ஜினீயர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2017-09-14 16:08 IST   |   Update On 2017-09-14 16:08:00 IST
சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:

சேலம், கந்தம்பட்டி, காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 20). இவர் சேலம் லீ பஜாரில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் 21-9-2012-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று லீ பஜாரில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் குட்டமணி என்கிற அன்பரசு(30) என்பவர் அங்கு வந்து கார்த்தியை திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உருவானது.

இதை பார்த்த குட்டமணியின் தம்பி அறிவழகன்(27) மற்றும் இவருடைய பாட்டி துர்க்கையம்மாள்(60) மற்றும் தாய் மாமன் குமார், இவருடைய மனைவி மணிமேகலை(44), இவர்களது மகள் கிரிஜா என்கிற கிருஷ்ணகுமாரி(23) ஆகியோர் அங்கு வந்தனர்.

அப்போது கார்த்திக் கட்டையால் சரமாரியமாக தாக்கப்பட்டார். இதனால் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் சரவணன் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கார்த்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குமார் திடீரென இறந்து விட்டார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நீதிபதி ஸ்ரீதர் குற்றம் சாட்டப்பட்ட குட்டமணி என்கிற அன்பரசு, அறிவழகன், துர்க்கையம்மாள், மணிமேகலை, கிரிஜா என்கிற கிருஷ்ணகுமாரி ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். குமார் ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆயுள் தண்டனை பெற்ற இளம்பெண் கிரிஜா என்கிற கிருஷ்ணகுமாரி எம்.இ.பட்டதாரி ஆவார். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் உள்பட அனைவரும் தீர்ப்பு கேட்டதும் கதறி அழுதனர்.

சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News