செய்திகள்

புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை - காலவரையின்றி சட்டசபை ஒத்திவைப்பு

Published On 2018-07-19 13:45 IST   |   Update On 2018-07-19 13:45:00 IST
புதுச்சேரியில் பட்ஜெட் மசோதாவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், சட்டசபைக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. #PuducherryAssembly
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.  அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கூட்டத் தொடரை இந்த மாதம் 27-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், மத்திய அரசு நேரடியாக நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்தது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான உத்தரவு பிறப்பித்தால் நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.



இதை தவிர்க்க கூட்டத்தொடரை சுருக்கி 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவெடுத்தனர். அதன்படி நேற்றுடன் பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து, நேற்று இரவு பட்ஜெட் மசோதாவுக்கு சட்டசபையின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், பட்ஜெட் மசோதாவுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.  #PuducherryAssembly

Tags:    

Similar News