உலகம்

முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரகுமான் வீட்டை சூறையாடி தீ வைத்த போராட்டக்காரர்கள்

Published On 2025-02-06 10:36 IST   |   Update On 2025-02-06 10:36:00 IST
  • ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல்.
  • போராட்டக்காரர்கள் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

டாக்கா:

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதனால் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் மீது இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

மேலும் கோர்ட்டும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. தற்போது நடந்து வரும் ஆட்சிக்கு எதிராக ஷேக் ஹசீனா தனது கருத்தை பதிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி லீக் கட்சியை தடை செய்யக் கோரி, திடீரென்று போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமரும், ஷேக் ஹசீனா தந்தையுமான ஷேக் முஜிபுர் ரகுமான் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இந்த வீட்டை முஜிபுர் ரகுமான் நினைவு இல்ல அருங்காட்சியகமாக ஷேக் ஹசீனா மாற்றி இருந்தார்.


அந்த வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள் 2-வது மாடியில் ஏறி கடப்பாரைகள், மரக்கட்டைகளால் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

பின்னர் வீட்டின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம், போலீசார் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலோ நடைபெறலாம். இதில் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என்று இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News