உலகம்

`ரூ.60 லட்சம் கொடுத்து ஏமாந்தோம்' - இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர்கள் கண்ணீர்

Published On 2025-02-06 11:43 IST   |   Update On 2025-02-06 11:43:00 IST
  • ரூ.45 லட்சம் கடன் வாங்கி அமெரிக்காவுக்கு அனுப்பினோம்.
  • சட்ட விரோதமாக அனுப்பிய ஏஜென்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், அமெரிக்காவில் ஆவணங்களின்றி சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 104 இந்தியர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரை இறங்கியது.

இதில் பஞ்சாப், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 104 பேர் வந்தனர். அவர்களிடம் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஹர்விந்தர்சிங் கூறுகையில், அமெரிக்காவில் வேலைக்கான விசா தருவதாக ஒரு ஏஜென்டு கூறியதை நம்பி ரூ.42 லட்சம் கொடுத்தேன். கடைசி நிமிடத்தில் விசா கிடைக்கவில்லை.

பின்னர் டெல்லியில் இருந்து கத்தார் சென்றேன். பின்னர் அங்கிருந்து பிரேசில் சென்றேன். அதன்பிறகு டாக்சி மூலம் கொலம்பியா, பனாமா சென்றேன். அதன்பிறகு நடந்தே மெக்சிகோ எல்லை நோக்கி புறப்பட்டேன். அப்போது என்னுடன் மேலும் சிலரும் படகில் வந்தனர்.

4 மணி நேர கடல் பயணத்தில் எங்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். நாங்கள் உயிர் பிழைத்தோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த சுப்பால்சிங் கூறுகையில், நாங்கள் கடல் வழியாக சுமார் 15 மணி நேரம் பயணம் செய்தோம். பின்னர் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட மலைகள் வழியாக 45 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றோம்.

இந்த பயணத்தின்போது வழியில் பலர் சடலங்களை கண்டோம் என்றார். இந்த தகவல்களை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பஞ்சாப்பை சேர்ந்த குர்ப்ரீத் சிங் குடும்பத்தினர் கூறுகையில், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.45 லட்சம் கடன் வாங்கி அவரை 6 மாதத்திற்கு முன்பு அமெரிக்காவுக்கு அனுப்பினோம்.

கடனை அடைக்க முடியாமல் தற்போது வீட்டை இழந்து விட்டோம். அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் உயிர் வாழ முடியும் என்றனர்.

இதேபோல ஆகாஸ்திப்சிங் என்ற வாலிபர் அமெரிக்காவுக்கு செல்ல ரூ.60 லட்சம் வரை செலவு செய்து ஏமாந்ததாக கூறினர்.

அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக வாலிபர்களிடம் ரூ.60 லட்சம் வரை கட்டணம் பெற்று சட்ட விரோதமாக அனுப்பிய ஏஜென்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் சட்ட விரோதமாக வாலிபர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜென்டுகள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

Tags:    

Similar News