100-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமை - தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்
- ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
காங்கோவின் கோமா நகரில் உள்ள மன்சென்ஸ் சிறையில் நூற்றுக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் காங்கோ நகரத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது மன்சென்ஸ் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பெண் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த சிறை பகுதி தீவைத்து கொளுத்தப்பட்டதில் ஏராளமான பெண்கள் உடல் கருகி உயிரிழந்ததாக ஐ.நா.அமைதிப் பேச்சுவார்த்தை குழுவின் துணை தலைவர் விவியன் வான் டி பெர்ரேவின் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்தில் நடந்த M23 தலைமையிலான மோதலில் இந்த அட்டூழியங்கள் மிக மோசமானவை என்று கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிறை வளாகப் பகுதியில் சுமார் 2,000 உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக விவியன் வான் டி பெர்ரேவின் கூறினார்.