இந்தியா

ஒவ்வொரு சிகரெட் புகைக்கும் போது வாழ்வில் 19 நிமிடம் குறைகிறது- ஆய்வில் தகவல்

Published On 2025-02-06 10:40 IST   |   Update On 2025-02-06 10:40:00 IST
  • ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும் போது அவரின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது.
  • புகைப்பிடிப்பதை கைவிட்டால் முடிந்த வரை உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம் என்றார்.

பெங்களுர்:

ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும் போது வாழ்வில் 19.5 நிமிடம் குறைவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்களின் வாழ்வில் 17 நிமிடம் குறைவதாகவும், பெண்களின் வாழ்வில் 22 நிமிடம் குறைவதாகவும் அந்த ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும் போதும் ஒருவர் வாழ்வில் 11 நிமிடம் குறைவதாக பழைய ஆய்வுகள் தெரிவித்து இருந்தன.

தற்போது லண்டன் பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள புதிய ஆய்வில் ஒருவர் 20 சிகரெட்கள் கொண்ட முழு பாக்கெட்டை பிடித்தால் அவர் வாழ்வில் முழுதாக 7 மணி நேரம் குறைகிறது.

ஒருவர் ஒரு நாளைக்கு 10 முறை சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் ஒரு வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒரு முழு நாளை சேமிக்கிறார். அப்படி பார்க்கும்போது ஒரு ஆண்டில் 50 நாளை முழுதாக சேமித்தவர் ஆவார்.

ஆனால் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் இழந்த நேரத்தை மீட்டு விடலாம் என்று லண்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூர் மருத்துவ மனையின் நுரையீரல் மற்றும் மருத்துவத் துறைத் தலைவரும், ஆலோசகருமான டாக்டர் பிரகதி ராவ் கூறியதாவது:-

ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும் போது அவரின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது. மூச்சுத் திணறல் குறைகிறது. நுரையீரலில் ஏற்படும் தொற்று குறைவதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அபாயமும் குறைகிறது. இதை அவர்களின் நுரையீரல் செயல்பாடு சோதனையின் மூலம் கண்டறியலாம். அது ஒரு நொடியில் ஒருவர் எவ்வளவு காற்றை வெளியேற்ற முடியும் என்பதை மதிப்பிட்டு சொல்லும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தாலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் உடலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். புகைபிடிக்கும் போது நுரையீரலின் செயல்பாடு 60 சதவீதமாக இருந்தால் புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது நுரையீரலின் தரம் 70 சதவீதமாக உயரும். ஆனால் 80 சதவீதமாக உயராது. புகைப்பிடிப்பதை கைவிட்டால் முடிந்த வரை உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம் என்றார்.

Tags:    

Similar News