null
பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபன் ஏஐ CEO
- பொதுவாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சந்தைக்கு குறிப்பாக ஓபன் ஏஐ-க்கு இந்தியா நம்பமுடியாத முக்கியமான சந்தையாகும்.
- இந்தியா, சிப்கள் முதல் மாடல் மற்றும் செயலிகள் வரை அனைத்தையும் உருவாக்கி வருகிறது.
சீனாவைச் சேர்ந்த டீப்சீக் நிறுவனம் டீப்சீக்-ஆர்1 என்ற சாட்போட் செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறுகிய காலத்தில் இதை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். மிகவும் குறைவான செலவில் உருவாக்கப்பட்ட இது, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உள்ளிட்ட மற்ற சாட்போட் செயலிகளைப் போலவே செயல்படுகிறது. இது ஏஐ உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அவர் நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்தார். அவர் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில், "முழு ஏஐ ஸ்டேக்கை உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் திட்டம் குறித்து சாம் ஆல்ட்மேனுடன் ஆலோசனை நடத்தினேன். ஜிபியு, மாடல் மற்றும் செயலி ஆகியவற்றை உருவாக்குவது தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் சாம் ஆல்ட்மேன் தொழில்நுட்ப துறையில் பிரதமர் மோடியின் கனவை பெரிதும் பாராட்டினார்," என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சாம் ஆல்ட்மேன் கூறும்போது, பொதுவாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சந்தைக்கு குறிப்பாக ஓபன் ஏஐ-க்கு இந்தியா நம்பமுடியாத முக்கியமான சந்தையாகும். இது எங்கள் இரண்டாவது பெரிய சந்தை ஆகும். இங்கு கடந்த ஆண்டில் எங்கள் பயனர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்தது. இந்தியா, சிப்கள் முதல் மாடல் மற்றும் செயலிகள் வரை அனைத்தையும் உருவாக்கி வருகிறது என்றார்.
மேலும் பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் நிறுவன தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களையும் ஆல்ட்மேன் சந்தித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.