நாடு கடத்துவது புதிதல்ல... கைவிலங்கு போடுவது அமெரிக்காவின் வழக்கம்: மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்
- இந்தியர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக நேற்று 104 இந்தியர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு இருந்தது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிரொலித்தது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இந்தியர்களுக்கு கை விலங்கு என்ற புகாரை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்துள்ளது.
இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்தியர்களை நாடு கடத்தும் செயல்முறை புதிது அல்ல. பல ஆண்டுகளாக உள்ளது.
* அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 2012-ல் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 2012-ல் 530 பேர், 2019-ல் 2 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
* கை விலங்கு போடுவது அமெரிக்காவின் வழக்கம். சட்டப்படியே அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் விலங்கிடப்படவில்லை.
* இந்தியர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
* திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனத் தெரிவித்தார்.