சாப்பிடும்போது கூட கைவிலங்கை கழட்டி விடவில்லை- அமெரிக்காவால் நாடுகடத்தப்பட்ட இந்தியர் வேதனை
- 40 மணி நேரம் எங்களின் கை, கால்கள் விலங்கிடப்பட்டிருந்தன.
- பலமுறை கேட்ட பின்புதான் கழிவறையைக் கூட பயன்படுத்த அனுமதித்தனர்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.
நேற்று அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் 33 பேர் அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாப் மற்றும் தலா மூன்று பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இருவர் சண்டிகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.
நாடுகடத்தப்பட்டவர்களில் 19 பேர் பெண்கள், 13 பேர் மைனர்கள் ஆவர். நாடுகடத்தப்பட்டவர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து போலீஸ் வாகனங்களில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விமானத்தில் நாடு கட்டத்தப்பட்ட சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டதாக நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், "40 மணி நேரம் எங்களின் கை, கால்கள் விலங்கிடப்பட்டிருந்தன. எங்கள் சீட்டிருந்து எங்களை நகர கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. பலமுறை கேட்ட பின்புதான் கழிவறையைக் கூட பயன்படுத்த அனுமதித்தனர். அப்போது கூட கழிவறையை திறந்து அவர்கள் எங்களை உள்ளே தள்ளினார்கள்.
சாப்பிடும்போது கூட கைவிலங்கையும் கால் விலங்கையும் கழட்டி விடவில்லை. இந்த பயணம் உடல் அளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் வேதனையை கொடுத்தது" என்று தெரிவித்தார்.