இந்தியா

வண்டி வண்டியாய் பொய் மூட்டை: பிரதமர் மோடி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

Published On 2025-02-06 20:16 IST   |   Update On 2025-02-06 20:16:00 IST
  • நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியை டார்கெட் செய்கிறார்.
  • மாநிலங்களவையில் புதிய வரலாற்றை அளித்துள்ளார். அவை அனைத்தும் பொய்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி "அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு. முழு கட்சியும் ஒரே குடும்பத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது மட்டுமே காங்கிரசின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சியில், அனைவரையும் திருப்திபடுத்த வேண்டி இருந்தது. இது தான் அவர்களின் அரசியல்பாதையாக இருந்தது.

அம்பேத்கரை காங்கிரஸ் வெறுத்த காலம் உண்டு. அவருக்கு எதிராக சதி செய்தது. பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்குவது குறித்து அக்கட்சி பரிசீலனை செய்யவில்லை. அவருக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தினால் தான், தற்போது காங்கிரஸ் ' ஜெய்பீம்' என்கிறது. காங்கிரஸ். 2 முறை தேர்தலில் அவரை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்தது. பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரசின் வழக்கமாக உள்ளது. இதனால் தான் கூட்டணி கட்சிகள் கூட அக்கட்சியை விட்டு விலகிச் செல்கின்றன" என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் 90 நிமிட பேச்சில் நிதியில் நீர் வடிந்து ஓடுவதுபோல், வண்டி வண்டியால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

பிரதமர் மோடி இரண்டு ஆயுதங்களை கொண்டுள்ளார். ஒன்று பிரதான் மந்திரி காங்கிரஸ் பத்னாம் யோஜனா, மற்றொன்று பிரதமர் இதிஹாஸ் டோட்-மரோத் யோஜனா (Pradhan Mantri Congress Badnam Yojana' and 'PM Itihaas Tod-Marodh Yojana). அவர் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியை டார்கெட் செய்கிறார். மாநிலங்களவையில் புதிய வரலாற்றை அளித்துள்ளார். அவை அனைத்தும் பொய்.

சரியான முறையில் பிரதமர் மோடி பேசினால், நாங்கள் அதைப்பற்றி விவாதித்திருக்கலாம். ஆனால், அவர் பொய் பேசுகிறார். வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்துள்ளார். இதுபற்றி என்ற சொல்ல முடியும்?.

பிரதமர் பதவிக்கு நாங்கள் மதிப்பு கொடுக்கிறோம். ஆனால் தவறுதலாக கூட உண்மையை பேசத் தெரியாத ஒருவரை எப்படி மதிக்க முடியும்?

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News