கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் - அமெரிக்காவின் பலமா? - மோடியின் பலவீனமா?
- அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
- கொலம்பியா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ராணுவ விமானத்தை அனுமதிக்க மறுத்தது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
ராணுவ விமானங்களை பயன்படுத்தி கவுதமாலா, ஈகுவடார், பெரு, ஹோண்டுராஸ் நாடுகளுக்கு சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா அனுப்பி வருகிறது.
அவ்வகையில் கடந்த மாதம், கொலம்பியாவிற்கு அனுப்பப்பட்ட அந்நாட்டு மக்கள் ராணுவ விமானத்தில் ஏ.சி, தண்ணீர் எதுவும் இல்லாமல், கைவிலங்கிட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இதற்கு கொலம்பியா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ராணுவ விமானத்தை அனுமதிக்க மறுத்தது.
இதன் காரணமாக கொலம்பியாவை சேர்ந்தவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ததுடன், அமெரிக்காவுக்கு அந்நாட்டு பயணிகள் வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக கொலம்பியாவும், அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது. பதிலுக்கு கொலம்பிய அரசு மீது அமெரிக்காவும் கடுமையாக வரி விதித்தது.
பின்னர் இரு நாட்டு அரசுகளும் சமாதானத்திற்கு வந்ததால் வரிவிதிப்பு நீக்கப்பட்டது. இறுதியாக தன் நாட்டு விமானத்தை அனுப்பி தனது மக்களை கொலம்பியா அரசு மீட்டது.
இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.
சொற்பமான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதற்கு சுமார் 20 மணி நேர ஆகும்.
இந்த விமானத்தில் நாடு கட்டத்தப்பட்ட சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களை விலங்கிட்டு அழைத்துவந்து அவமானப்படுத்தியதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிற்கு கடும் அழுத்தம் கொடுத்து இந்தியாவின் மரியாதையை காங்கிரஸ் கட்சி கைப்பற்றிய சம்பவத்தை நாம் நினைவு கூறலாம்.
காங்கிரஸ் ஆட்சியின் இறுதிகட்டத்தில் இந்திய தூதர் தேவயாணி கோபர்கடே அமெரிக்காவில் பணிப்பெண்ணுக்கு முறையான ஊதியம் வழங்காத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அப்போது இந்தியா தனது கண்ணியத்தை காக்கும் பொருட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கி வந்த பல சலுகைகளை இந்திய அரசு விலக்கிக்கொண்டது. பின்னர் இந்திய அரசின் நடவடிக்கைகளால் தேவயானி இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்தும் விவகாரத்தில் கொலம்பியா போல இந்தியா எவ்வித அழுத்தமும் அமெரிக்க அரசுக்கு கொடுக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில், ராணுவ விமானத்தில் கை, கால்களுக்கு விலங்கிட்டு அவமரியாதையுடன் இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
* பயணிகள் விமானத்தில் அனுப்புவதை விட ராணுவ விமானத்தை பயன்படுத்துவது 5 மடங்கு செலவு பிடிக்கும் என்கிறது கார்டியன் பத்திரிகை. ஆகையால் இது வெளியேற்ற நடவடிக்கை என்பதைவிட, இந்தியர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையா என்று கேள்வி எழுகிறது.
* அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை பார்த்தால் பலவீனமான பிரதமரா மோடி? என்று இந்திய மக்களிடம் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
* பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.