நாடு கடத்தப்பட்ட விவகாரம்: இதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன- ப. சிதம்பரம்
- அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இருக்கலாம். ஆனால், நாடு கடத்தல் மனிதாபிமான முறையில் செய்யப்பட வேண்டும்.
- அவர்கள் ஏன் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்?. இங்கு நிலைமை மிகவும் மோசமான இருப்பதாக நினைக்கிறார்கள்.
அமெரிக்காவில் எந்தவிதமான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அவர்களுடைய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானங்கள் மூலமாக நாடு கடத்தி வருகிறது.
அந்த வகையில் 104 இந்தியர்களை நாடு கடத்தியது. அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அவர்கள் விமானத்தில் வரும்போது விலங்குகளால் பிணைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியவர்கள் நாடு கடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. நாடு கடத்தப்படுபவர்களுக்கான சட்ட வழிபாட்டு நெறிமுறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
இந்த பிரச்சனை இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. ஒரு பக்கம் நாடு கடத்தும்போது, மனிதாபிமானமற்ற முறையில் இந்தியர்கள் நடத்தப்பட்டது. அவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இருக்கலாம். ஆனால், நாடு கடத்தல் மனிதாபிமான முறையில் செய்யப்பட வேண்டும். அவர்களை சங்கிலியால் பிணைத்து ராணுவ விமானத்தில் கொண்டு செல்ல முடியாது.
மறுபக்கம்... அவர்கள் ஏன் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைய முயல்கிறார்கள். அவர்கள் ஏன் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்?. வெளிப்படையாக, இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமான இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். வேறு நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு, இளைஞர்களை இந்தியாவில் இருந்து வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.