விபத்தில் சிக்கிய லாரி: சாலையில் துள்ளி குதித்த மீன்களை அள்ளி சென்ற பொதுமக்கள்
- எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது.
- மினி வேனில் இருந்த மீன்கள் சிதறி சாலையில் கொட்டியது.
ஒடுகத்தூர்:
விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு மினி லாரி வந்தது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் (வயது 28) என்பவர் மினி லாரி ஓட்டி வந்தார்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி வந்தபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. மினி வேனில் இருந்த மீன்கள் சிதறி சாலையில் கொட்டியது.
அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் கொட்டிக்கிடந்த மீன்கள் மீது ஏறி இறங்கியதில் சிதைந்தன. மேலும் சில மீன்கள் ரோட்டில் துள்ளி குதித்தன.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து டிரைவருக்கு என்ன ஆனது என்று கூட பார்க்காமல் சாலையில் சிதறி கிடந்த மீன்களை சாக்கு பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளி சென்றனர்.
சிலர் தாங்கள் அணிந்திருந்த லுங்கியிலும், சேலையிலும் போட்டு க்கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்த பள்ளி கொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீன்கள் அள்ளிக் கொண்டு இருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.