செய்திகள்

நாகர்கோவிலில் கணவரை அடித்து கொன்ற மனைவி கைது- பரபரப்பு வாக்குமூலம்

Published On 2018-09-07 22:03 IST   |   Update On 2018-09-07 22:03:00 IST
மது குடித்து வந்து தகராறு செய்த கணவரை அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் சிவசக்தி தெருவைச் சேர்ந்தவர் குமரப்பராஜன், (வயது 51), தொழிலாளி.

குமரப்பராஜனின் மனைவி பானுமதி. குமரப்ப ராஜன் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி மது குடித்து விட்டு தெருவில் மயங்கி கிடப்பது வழக்கம். மனைவி மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அப்போது அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். பின்னர் வீடு அருகே மயங்கி கிடப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல மது குடித்து மயங்கி கிடந்த குமரப்பராஜன் திடீரென இறந்து போனார்.

அதிக போதை காரணமாக குமரப்பராஜன் இறந்து விட்டதாக அவரது மனைவி பானுமதி தெரிவித்தார். உறவினர்களும் இதனை நம்பினர். 

குமரப்பராஜன் தெருவில் இறந்து கிடந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனையில் குமரப்பராஜன் தலையில் அடிபட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்ட தகவலை தொடர்ந்து போலீசார் குமரப்பராஜன் சாவு குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. குமரப்பராஜனை அவரது மனைவியே அடித்து கொன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரப்பராஜனின் மனைவி பானுமதியை பிடித்து விசாரித்தனர்.

பானுமதி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை தள்ளி விட்டு கம்பால் அடித்ததாகவும் அவர், மயங்கி விழுந்து இறந்து போனதும் தெரியவந்தது. அதன் பிறகே பானுமதி போதையில் கணவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தெரிவித்து நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பானுமதியை கைது செய்தனர். அவர், போலீசாரிடம் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-

நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனது கணவர் குமரப்பராஜன். கூலித் தொழிலாளி. வேலைக்கு சென்று கிடைக்கும் பணம் அனைத்தையும் குடித்தே செலவு செய்தார். குடும்பச் செலவிற்கு பணம் தருவதில்லை. தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வார். என்னையும் அடித்து உதைப்பார். சம்பவத்தன்றும் இதுபோல குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைத்தார். அவரிடம் இருந்து தப்பிக்க நான், கணவரை தள்ளி விட்டேன். கம்பலாலும் அடித்து விரட்டினேன். 

அவர், சத்தம் போட்டப்படி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் தேடிச்சென்ற போது அவர், இறந்து விட்டது தெரியவந்தது. கணவரிடமிருந்து என்னை தற்காத்து கொள்ளவே அவரை தாக்கினேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News