செய்திகள்
கொலை

சுவாமிமலை அருகே வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2020-08-13 14:49 IST   |   Update On 2020-08-13 14:49:00 IST
சுவாமிமலை அருகே வாலிபரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேல கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அருண்ராஜ் (வயது 22). ஒலி-ஒளி அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுவாமிமலை அருகே உள்ள நாகக்குடி கிராமத்தை சேர்ந்த அம்பிகா(20). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக அருண்ராஜ் நாகக்குடி கிராமத்துக்கு வந்தார். அப்போது அங்கு வயல்வெளி பகுதியில் நின்று கொண்டிருந்த அருண்ராஜை, மர்ம நபர்கள் சிலர் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அருண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடரந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, திருவேங்கடம் மற்றும் போலீசார் அங்கு சென்று அருண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ராஜை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இந்த கொலை எதற்காக நடந்தது? முன் விரோதம் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மனைவி, குழந்தையை பார்க்க வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News