போற்றி பாடடி பெண்ணே... ரசிகர் பாடிய பாடலை கேட்டு ரசித்த கமல்ஹாசன்
கோவை:
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் கடந்த 15-ந் தேதி முதல் கோவையில் முகாமிட்டு தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை 6.30 மணியளவில் கமல்ஹாசன் காந்திபார்க் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். கமல் வருவதை பார்த்ததும் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். அவரின் அருகில் சென்று நலம் விசாரித்து, அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர். பதிலுக்கு கமலும் மக்களிடம் நலம் விசாரித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மாற்றத்திற்காக மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தாருங்கள் என அவர்களிடம் கேட்டு கொண்டார்.
தொடர்ந்து பூ மார்க்கெட் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள கடைகளை ஆய்வு செய்து, வியாபாரிகளிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வியாபாரிகள் அவருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ந்தனர். அங்கிருந்து நேராக காரில் காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். காரை விட்டு இறங்கி பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்று காபி குடித்தார். பின்னர் சிறிது நேரம் அங்குள்ள ஊழியர்களிடம் கலந்துரையாடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு டீ குடிக்க வந்த முதியவர் கமல் இருப்பதை பார்த்ததும் அவரிடம் சென்று நல்லா இருக்கீங்களா? என்று நலம் விசாரித்தார். பதிலுக்கு அவர் நான் நலம் நீங்கள் நலமா? என முதியவரிடம் விசாரித்தார்.
பின்னர் கமலிடம் முதியவர் நான் உங்களின் தீவிர ரசிகன் என்றும், நீங்க பாடிய ஒரு பாடலை நான் பாட விரும்புகிறேன். பாடலாமா? என்றார். கமலும் பாடுங்கள் கேட்கிறேன் என்றார். உடனடியாக முதியவர் கமல் பாடிய போற்றி பாடி பெண்ணே... என்ற பாடலை அவர் முன்பு பாடி காட்டினார். அவர் பாடியதை கமல் காபி குடித்து கொண்டே மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் ரசித்து கேட்டார்.பின்னர் கமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இந்த பாடல் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் இடம்பெற்றது. மேலும் இந்த பாடலை கமலே பாடியிருந்தார். படம் வெளியானபோது இந்த பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.