தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்போடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published On 2024-02-16 11:56 IST   |   Update On 2024-02-16 11:56:00 IST
  • உழவர்களை கடன் சுமையில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.
  • பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், காலப்போக்கில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய உழவர்களே இருக்க மாட்டார்கள்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை விளைச்சல் குறைந்திருக்கிறது.

குறுவையைத் தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன் வராதது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் கூட, கர்நாடகத்திடம் இருந்து போதிய தண்ணீர் பெற தமிழக அரசு தவறியதால் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியவில்லை.

உழவர்களை கடன் சுமையில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40,000 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5400 என்ற அளவில் தான் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது.

இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. சம்பா பயிர்களின் விளைச்சல் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு வாயைத் திறக்கவில்லை.

பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், காலப்போக்கில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய உழவர்களே இருக்க மாட்டார்கள்.

அதன்பின் அரிசிக்காக நான் பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்.

அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News