தமிழ்நாடு

200 பேரை பலிகொண்ட கோர தினம் இன்று... அழியாத சுவடாகிய அரியலூர் ரெயில் விபத்து

Published On 2022-11-23 08:32 IST   |   Update On 2022-11-23 08:32:00 IST
  • அரியலூர் ரெயில் நிலையத்தை தாண்டிய தூத்துக்குடி ரெயில் மருதையாற்று பாலத்தின் மீது சென்றபோது ரெயிலின் பாரம் தாங்காமல் அனைத்து பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன.
  • அதிகாலையில் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலர் தூக்கத்திலேயே இறந்து போயினர்.

விபத்துகள் என்பது புதிதல்ல, பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு ரூபங்களில் அவை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சில, பல மனித உயிர்களை காவு கொண்டு, மக்கள் மனதில் என்றென்றும் அழியாத சுவடாக மாறிவிடுகிறது. உதாரணமாக கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்றவற்றை கூறலாம். சமீபத்தில் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் கடந்த 30-ந் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீப காலத்தில் நாட்டில் நடந்த மோசமான விபத்தாக இதை கூறலாம்.

ஆனால் கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரியலூரில் மிகப்பெரிய ரெயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரெயில் பெட்டிகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் ஜலசமாதி அடைந்தது பெரும் சோகமாகும். அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு தூத்துக்குடி நோக்கி 12 பெட்டிகளுடன் ஒரு ரெயில் புறப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது.

இதனால் அரியலூர்-சில்லக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மருதையாற்றில் அபாய அளவைத்தாண்டி தண்டவாளங்களை தொட்டபடி மழைநீர் சென்றது. அந்த வழியாக வந்த ரெயில் பாதை பாதுகாப்பு ஊழியர் (கேங்மேன்) இருளில் தண்ணீரின் அளவு தெரியாமல் பாலத்தின் மேலே நடந்து சென்றுள்ளார். அதனால் அவர் எந்தவிதமான எச்சரிக்கையையும் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தை தாண்டிய தூத்துக்குடி ரெயில் மருதையாற்று பாலத்தின் மீது சென்றபோது ரெயிலின் பாரம் தாங்காமல் அனைத்து பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன. இதற்கான காரணம், ரெயில் வந்த சமயத்தில் தண்டவாளங்கள் மட்டுமே அந்தரத்தில் தொங்கியிருக்கின்றன என்பது பின்பே தெரியவந்தது.

அதிகாலையில் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலர் தூக்கத்திலேயே இறந்து போயினர். மழைநீர் வேகமாக சென்றதால் பலர் உடைந்த பெட்டிகளுடன் பல மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ரெயில் விபத்து நடந்த தகவல் சூரிய உதயத்திற்குப் பிறகே தெரியவந்தது.

அதிகாலையில் படுகாயமடைந்தவர்களின் அபயகுரலும், முனகல் சத்தங்களும், மரண ஓலமும் கேட்டுள்ளது. மேலும் பயங்கர சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அருகில் உள்ள ராமலிங்கபுரம், ரசுலாபுரம், சில்லக்குடி, மேத்தால், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய சிலரை மீட்டனர்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அவசர கால மீட்பு படையினர் விரைந்து வந்து ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கிய ஒரு சிலரை மீட்டதோடு, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து நடந்த இடத்தை நேரில் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த சிலர் கூறியதாவது:-

சம்பவத்தன்று மிக கனமழை பெய்தது. அப்போதெல்லாம் கிராமங்களில் மின்விளக்குகள், சாலைகள் கிடையாது. அன்று அதிகாலை பயங்கர சத்தம் கேட்டது. எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் கையில் தீப்பந்தம் ஏந்திச்சென்று யார் வீட்டு சுவரேனும் இடிந்துள்ளதா? என்று வீதிகள்தோறும் சென்று பார்த்தோம். அப்படி இல்லாத நிலையில் எல்லோரும் படுத்துவிட்டோம். சூரிய உதயத்திற்கு பிறகு எழுந்து பார்த்தபோது எங்கள் நிலத்திலேயே ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்தன. பலர் இறந்து கிடந்தனர். அழுகுரலும், காப்பாற்றுங்கள் என்ற சத்தமும் கேட்டன.

எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று எங்களால் முடிந்த உதவிகளை செய்து, ஒரு சிலரை காப்பாற்றினோம். ஒரு சிலரின் உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கே மிகவும் சோகமாக இருந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 200 பேருக்கு மேல் இறந்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த விபத்து நடந்து 66 ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவம் அழியாத சுவடாக உள்ளது. இதேபோல் 1987-ம் ஆண்டு இதே இடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து மலைக்கோட்டை விரைவு ரெயிலை தகர்த்ததில் 60 பேர் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News