பவானி கூடுதுறையில் புனித நீராட திரண்ட ஐயப்ப பக்தர்கள்
- பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
- கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.
பவானி:
பவானி கூடுதுறையில் இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு பின்னால் உள்ள இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உள்ளூர், வெளியூர் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் பலரும் அதிகாலை முதலே பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வார்கள்.
அதேபோல், தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது இங்கு உள்ள சங்கமேஸ்வரர் சாமியை தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
அதன்படி கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.