தமிழ்நாடு

தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை 199-வது இடம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2024-10-10 05:17 GMT   |   Update On 2024-10-10 05:17 GMT
  • தி.மு.க. அரசும், துறை அமைச்சர்களும், மாநகராட்சி மேயரும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான் இருக்கிறார்கள்.
  • அம்மா ஆட்சியில் நடைபெற்றது போல், சென்னை மாநகரில் தூய்மைப் பணிகள், சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள நகரங்களின் தூய்மைப் பட்டியலில், எங்கள் ஆட்சியில் 2020-ல் 45-வது இடத்திலும்; 2021ல் 43-வது இடத்திலும் சென்னை மாநகராட்சி இருந்தது. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று தம்பட்டம் அடிக்கும் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த உடன், இரண்டு முறை சொத்துவரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு என்று பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மக்களிடம் வசூலிக்கும் கட்டணங்களுக்கு ஏற்ப தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததன் காரணமாக இன்று சென்னை மாநகராட்சி அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, இந்த ஆண்டு 199-வது இடத்தைப் பிடித்துள்ளதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.

இதன்மூலம் தி.மு.க. அரசும், துறை அமைச்சர்களும், மாநகராட்சி மேயரும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர, எந்த நலத் திட்டங்களையும் நிறைவேற்றாதது அம்பலமாகியுள்ளது.

பருவ மழைக்காலங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில், 2020-ம் ஆண்டில் அந்த இடங்கள் பெருமளவு குறைக்கப்பட்டது. அப்போது, சென்னையில் 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. ரொபோடிக் எக்சவேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு சென்னை மாநகராட்சி முழுவதும் தூர்வாரும் பணிகள், தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

எங்களது ஆட்சியில் இப்பணிகள் முழுமையாக நடைபெற்றதுபோல், மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில் இப்பணிகள் முழுமையாக நடைபெறாத காரணத்தால், தூய்மை நகரமாக 43-வது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது 199-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இனியாவது, அம்மா ஆட்சியில் நடைபெற்றது போல், சென்னை மாநகரில் தூய்மைப் பணிகள், சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், தினசரி குடிநீர் வழங்கவும், கழிவு நீர் அகற்றல் போன்ற அடிப்படை வசதிகளையும் மு.க.ஸ்டாலினின் அரசு மேற்கொண்டு, மீண்டும் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சியை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News