நந்தனம் மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் - முதலமைச்சர் திறந்துவைத்தார்
- நந்தனத்தில் ரூ.365 கோடியில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
- இந்த அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.
சென்னை:
சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சராசரியாக தினசரி 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். 15 பெண்கள் உள்பட 180 பேர் மெட்ரோ ரெயில் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர்.
மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நிர்வாக கட்டிடத்தில் மேலாண்மை இயக்குனர் அலுவலகம், ரெயில் பணிமனை, ரெயில் கட்டுப்பாட்டு அறை ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதனால் இங்கு இடநெருக்கடி இருந்து வருகிறது.
இதற்கிடையே, நந்தனம் தேவர் சிலை அருகில் 3.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.365 கோடி செலவில் 12 மாடிகளுடன் பிரம்மாண்டமான மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர 6 மாடி கட்டிடத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான கட்டிடமும் கட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த 12 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டிடத்தை மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அதன்பின் அவர்கள் கட்டிடத்தைப் பார்வையிட்டனர்.