தமிழ்நாடு

போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

போடியில் தொடர்மழை: அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2023-09-21 10:48 IST   |   Update On 2023-09-21 10:48:00 IST
  • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
  • போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடியின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை வெள்ளத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதற்காகவும், போடியை சுற்றியுள்ள கண்மாய்களின் முக்கிய நீர்பிடிப்பு ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீர்வீழ்ச்சி போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்பட்டு வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு குரங்கணி, கொம்பு தூக்கி, கொட்டகுடி, பிச்சங்கரை ஆகிய பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக மழையின்மை காரணமாக முற்றிலும் வறண்டு காணப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் போடியை சுற்றியுள்ள மீனாட்சி அம்மன் கண்மாய், பங்காரு சாமி குளம் போன்ற குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

Tags:    

Similar News