அணை பகுதிகளில் தொடர் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
- அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 56.25 அடியாக இருந்த நிலையில், தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 59.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 69.75 அடியாக இருந்த நிலையில் மேலும் 11 அடி அதிகரித்து இன்று காலை 81.03 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 2,874 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மாநகர பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதியை பொறுத்தவரை அம்பையில் அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கன்னடியன் கால்வாய் பகுதியில் 8.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 3 மில்லிமீட்டரும், களக்காட்டில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையில் கனமழை பெய்தது. கடந்த 4 நாட்களாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பெய்து வரும் கனமழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 62 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 18.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 46.60 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 30.74 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 21 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்றில் இருந்து 3 அடி உயர்ந்து 55 அடியாக அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தென்காசி, கடையம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி சாரல் மழை பெய்து வருகிறது.