இளைஞர்களின் வேலைவாய்ப்பினை தி.மு.க. அரசு பறிக்கிறது- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
- பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன.
- 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.
இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை முதல் செயலாளர் நிலைவரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமூகநீதி தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.