கவர்னரை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் மீது அவதூறு வழக்கு: அரசுக்கு காவல்துறை பரிந்துரை
- கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
- திமுக பேச்சாளர் மேடையில் கவர்னரை அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசியதாக புகார்
சென்னை:
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்தார். அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக பேச்சாளர் இவ்வாறு கவர்னரை வெளிப்படையாக மிரட்டும் வகையில் பேசியது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் எஸ்.பிரன்னா ராமசாமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பியுள்ளார். அதில், திமுக பேச்சாளர் மேடையில் கவர்னரை அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசியுள்ளார். கவர்னரை தரம் தாழ்ந்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இ.பி.கோ. 124 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரும்படி தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.