தமிழ்நாடு

சேடப்பட்டி முத்தையா மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Published On 2022-09-21 17:09 IST   |   Update On 2022-09-21 17:09:00 IST
  • 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
  • சேடப்பட்டி முத்தையா திமுகவின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றியதாக மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையாவின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி திரு. முத்தையா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.

நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி திரு. முத்தையா அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் முன்னிலையில் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி திரு. முத்தையா அவர்கள், அப்போது முதல், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார்.

அண்மையில் மதுரை சென்றிருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி, தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News