தென்காசி மாவட்டத்தில் கண்ணாமூச்சி காட்டும் தென்மேற்கு பருவமழை
- தென்மேற்கு பருவ மழையினை நம்பி நெல் சாகுபடி தொடங்கப்படும்.
- மே மாத இறுதியில் நெல் விதை பாவி, ஜூன் முதல் வாரத்தில் நாற்று நடவு தொடங்கி விடுவது வழக்கம்.
செங்கோட்டை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அதற்கான அறிகுறி இல்லை. மாறாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் காற்று மட்டுமே வீசி வருகிறது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதில் செங்கோட்டை பகுதியில் மழை இல்லாததால் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன.
இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் பூ மகசூலான அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உளுந்து, சோளம், பயிறு உள்ளிட்ட கோடைகால பயிர்களும் நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்களும் பயிரிடப்பட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
தென்மேற்கு பருவ மழையினை நம்பி நெல் சாகுபடி தொடங்கப்படும். இதற்காக மே மாத இறுதியில் நெல் விதை பாவி, ஜூன் முதல் வாரத்தில் நாற்று நடவு தொடங்கி விடுவது வழக்கம். தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காண்பித்து வருவதால் குண்டாறு, மோட்டை , ஸ்ரீமூலபோரி, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் குறைந்த அளவில் தண்ணீர் காணப்படுகிறது.
மேலும் ஆறுகள், கால்வாய்கள் ஓடைகள் அனைத்திலும் நீர் வறண்ட நிலையில் இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்துள்ளது.
தென்காசி மாவட்ட எல்லை அருகே அமைந்துள்ள கேரள மாநிலம் தென்மலை அணையிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த காட்டு மாடு ஒன்று சகதியில் சிக்கி வெளியே வரமுடியாமல் போராடிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து காட்டு மாட்டை மீட்டனர்.
மழை இல்லாததால் செங்கோட்டை பகுதியில் ஒரு சில இடங்களை தவிர ஏனைய இடங்களில் நாற்று பாவும் பணி கூட தொடங்காத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருவதோடு கண்ணீர் வடிக்கின்றனர்.
மேலும் ஜூன் மாதத்தில் பாதி கழிந்துவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழை உரிய முறையில் பெய்தாலும் இனி நாற்றுப்பாவினால் கூட அறுவடை காலம் தாமதமாகும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு தாமதமானால் வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி நன்கு விளைந்த பயிர்கள் கூட சேதமடையும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.