கோழிக்கறி சாப்பிட்ட தந்தை-மகள் திடீர் உயிரிழப்பு
- இரவு கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர்.
- ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கவுதம் ஆனந்திற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் பெரியபொக்கம்பட்டியில் வசித்து வந்தவர் கவுதம் ஆனந்த் (வயது 33). இவரது மனைவி பவித்ரா. இவர்களுடைய 4 வயது மகள் மிதுஸ்ரீ. நேற்று முன்தினம் இரவு கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர். சிறிதுநேரத்தில் சிறுமி மிதுஸ்ரீக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தாள். அவளை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கவுதம் ஆனந்திற்கும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், நேற்று அதிகாலை மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தாள். மகள் இறந்ததை அறிந்து கவுதம் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். திடீரென அவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாகவும், அதை சமைத்து சாப்பிட்டதால் இருவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.