பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 வாலிபர்கள் உடல் சிதறி பலி
- பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர்.
- படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இந்த ஆலையில் 11 பேர் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.
அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது.
வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள், பட்டாசு ஆலையில் இருந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் உடல் சிதறி இறந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல் பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை 18 இடங்களில் சிதறி கிடந்தன.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொறையாறு போலீசார், வெடிவிபத்தில் பலியான 4 வாலிபர்களின் உடல்களை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
கவிசாரணையில், பலியான வாலிபர்கள் கிடங்கல் மாமாகுடியை சேர்ந்த பக்கிரி மகன் மாணிக்கம் (வயது 32), மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் மதன்(21), சித்தர்காட்டை சேர்ந்த மணிமாறன் மகன் நிகேஸ்(22), மூவலூரை சேர்ந்த ராஜ்மோகன் மகன் ராகவன்(22) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களில் உயிரிழந்த நிகேஸ் கல்லூரி மாணவர் ஆவார்.
மேலும் படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகனிடம் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா விசாரணை நடத்தி வருகிறார். வெடி விபத்து நடந்த இந்த பட்டாசு தொழிற்சாலை லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பொறையாறு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.