புகார் கொடுக்க வந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு
- ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
- தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).
இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.
இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.