தேர்தல் பிரசாரம் மூலம் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வருமானம்
- ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்தது.
- ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், 3 மணி நேரத்திற்கான கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடந்தது. வருகிற 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த 2 மாதங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதிலும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இன்னும் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் டெல்லியில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் கடந்த 2 மாதங்களாகவே வாடகை ஹெலிகாப்டர்களில் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் வாடகை ஹெலிகாப்டர்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்திருந்தனர். குறிப்பாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வசதியாக ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்திருந்தனர்.
மேலும் இந்த முறை மாநில கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரம் செய்ய ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தினார்கள். இதனால் இந்த பாராளுமன்ற தேர்தலின் போது வாடகை ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரித்தது. இதனால் ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்தது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வருமானம் கிடைத்துஉள்ளது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது:-
7 பேர் அமரக்கூடிய ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை ரூ.1.50 லட்சமாக அதிகரித்துள்ளது. 8 பேர் அமரக்கூடிய இரட்டை என்ஜின் ஹெலிகாப்டரின் வாடகை ரூ.3 லட்சம் ஆகும். 15 பேர் வரை அமரக்கூடிய ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேர வாடகை ரூ.4 லட்சம் ஆகும்.
கடந்த தேர்தலின் போது, வழக்கத்தை விட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக 50 சதவீதம் வரை வசூலித்தனர். ஹெலிகாப்டர்களின் தேவைகள் அதிகரித்துள்ளதால் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 200 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. பாராளுமன்ற தேர்தலின் போது, ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான நீண்ட கால வாடகை ஒப்பந்தங்களை செய்துள்ளன. தேசிய கட்சிகள் ஹெலிகாப்டர்களை முன்கூட்டியே வாடகைக்கு எடுத்து விட்டன. இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 3 மணி நேரம் வாடகை செலுத்த வேண்டும்.
ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், 3 மணி நேரத்திற்கான கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். எனவே 60 நாட்களுக்கு 180 மணி நேரம் வாடகை செலுத்த வேண்டும். இது போக கூடுதல் நேரம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் கட்டணம் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2 மாதங்களில் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.