ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிவு- சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
- நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது.
ஒகேனக்கல்:
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி கரையோரங்களில் மழையின் காரணமாகவும் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கரையோரங்களில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக இருந்த நிலையில் நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீடித்து வந்தது.
இந்த நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது.