போடியில் தனியார் ஆஸ்பத்திரி உள்பட 5 இடங்களில் நடந்த ரெய்டு நிறைவு
- ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
- சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி பஸ் நிலையம் அருகில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் அன்புச்செழியன், அமுதா தம்பதியினர் நடத்தி வருகின்றனர். டாக்டர் அன்புச்செழியன் மாவட்ட குடும்ப நல மருத்துவத்துறையில் இணைஇயக்குனராக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்து வருகிறார்.
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக மதுரை வருமானவரித்துறை துணை இயக்குனர் மைக்கேல்ஜெரால்டு, தேனி வருமானவரி அலுவலர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் 4 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரி, அவரது வீடு, மற்றும் ஏலக்காய் கடை, தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
போடியில் உள்ள பிரபல ஏலக்காய் வியாபாரியான ஞானவேல் என்பவரின் அலுவலகத்தில் நடந்த சோதனை நேற்று காலை நிறைவடைந்தது. ஞானவேல் அ.ம.மு.க கட்சியில் நகர செயலாளராக இருந்து வருகிறார். மற்ற இடங்களில் சோதனை நிறைவு பெற்றாலும் டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது.
ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நர்சுகள் உள்பட அனைத்து பணியாளர்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டன. 3 நாட்களாக நடந்த வந்த சோதனை இன்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போடியில் நடந்த இந்த தொடர் வருமான வரித்துறை சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.