செந்தில்பாலாஜியின் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு
- அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
- இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னை:
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்தபின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், நீதிபதி அல்லி இன்று விடுப்பு எடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.