சென்னை கனமழை: பாதுகாப்பு உங்களுக்குத்தான்- சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற முதலையின் வீடியோ
- சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிறைந்து தண்ணீர் வெளியேற்றம்.
- பெருங்களத்தூர் சாலையில் பயமுறுத்தும் வகையில் முதலையின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 24 மணி நேரத்திற்குள் 25 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை புறநகரில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது.
இதனால் நீர் நிலைகளில் இருந்து ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்த வண்ணம் உள்ளது. அப்படி நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேறும்போது, அதில் முதலை இருந்தால் வெளியேறிவிடும்.
அந்த வகையில் சென்னை வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றம்- பெருங்களத்தூர் சாலையில சுமார் 6 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட முதலை ஒன்று நீர் நிலையில் இருந்து வெளியேறி, ஒய்யாரமாக நடந்து செல்லும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலை நடந்து செல்வதை காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து அதை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், முதலை சாலையை கடக்கும்போது இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் கவனமாக செல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளனதாகவும் புயல் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும்" தெரிவித்துள்ளார்.
ஆனால், மழை வெள்ளம் எப்போது வடியும் என அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், முதலை வீட்டிற்குள் வந்துவிடுமோ என்ற அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது.