தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை- அமைச்சர் கீதாஜீவன்
- சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள்.
- இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை:
கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வலட்சுமி அமிதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதை குறித்தும் உணர்த்திடும் வகையில் அரசு சார்பில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளரும் விதமாக தமிழகம் முழுவதும் 36 லட்சம் அங்கன்வாடிகளில் முதல்-அமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சத்தான உணவு வழங்க ஆலோசனை வழங்கப்பட்டு, அதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை, காது செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை தாய்மார்களே அறிந்திடாத நிலையில் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு தரமான ஊட்டச்சத்து மற்றும் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது.
சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். காலம் காலமாக, அழுகிய முட்டைகளை தண்ணீரில் போட்டு கண்டுபிடித்து அதனை திருப்பி அனுப்புவதற்காக தனியாக சேமித்து வைக்கப்படும். இந்த நடைமுறை 1996-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
திருப்பி அனுப்ப வைக்கப்பட்டிருந்த முட்டைகளை போட்டோ எடுத்து பா.ஜ.க.வினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு புரிதல் இல்லாமல் உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அங்கன்வாடிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.