கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டியால் பரபரப்பு- போலீசார் விசாரணை
- சந்தன கலர் பெயிண்ட் பூசப்பட்ட, சீல் இடப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு நடந்து சென்றனர்.
அப்போது கடற்கரையோரம் சுமார் ஒன்றரை அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட சந்தன கலர் பெயிண்ட் பூசப்பட்ட, சீல் இடப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் உடனடியாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா, க்யூ பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சீர்காழி சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம பெட்டியை கைப்பற்றி மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அந்த மர்ம பெட்டி எவ்வாறு அங்கு வந்தது அல்லது யாரும் கொண்டு வந்து இங்கு போட்டு விட்டு சென்றார்களா? மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம பெட்டியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.