தமிழ்நாடு

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ஓ.பன்னீர்செல்வம்

Published On 2022-07-11 10:32 IST   |   Update On 2022-07-11 13:02:00 IST
  • எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை தடுத்து நிறுத்தினார்கள்.
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை விஸ்வரூபம் அடைந்த தால் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் தன்னை ஓரம் கட்டப்படுவதை அறிந்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மீது பயங்கர அதிருப்தி அடைந்து கோபத்தில் இருந்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவை வானகரத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நடத்துவதால் 9 மணி கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு எதுவும் செய்ய முடியாது என்பதால் ஓ.பன்னீர்செல்வம் நேற்றே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை கைப்பற்றுவது என்று ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்தார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனது ஆதரவாளர்களை சென்னைக்கு வரும்படி நேற்றே அழைப்பு விடுத்தார்.

அதன்படி ஓ.பன்னீர்செல்வத்தின் சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கே 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்தனர்.

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு வந்தனர்.

எல்லோரும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு கூடியதால் அங்கிருந்த தொண்டர்கள் இடையே உற்சாகம் ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

தொண்டர்கள் வந்ததை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசார வேனில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் நோக்கி புறப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்த தொண்டர்கள் உற்சாக மிகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் வாரிசே வருக ஓ.பி.எஸ். வாழ்க என்று மாறி மாறி முழக்கமிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கும்பிட்டபடி வேனில் அமர்ந்திருந்தார்.

அவரது வேனை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பின் தொடர்ந்து திரண்டு வந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமைக்கழகம் வரும் தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று மாலை தெரிய வந்ததால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்தார்.

இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை பூட்டச்சொல்லி தனது ஆதரவாளர்களை தலைமை கழகத்தில் பாதுகாப்புக்காக கொண்டு வந்து நிறுத்தினார். மாவட்டச் செயலாளரான ஆதிராஜாராம் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தார். அ.தி.மு.க. தலைமைக்கழகம் முன்பு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கொடியுடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது காலை 8.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் வேன் அ.தி.மு.க. தலைமை கழகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேனுக்கு முன்னால் முன் கூட்டியே தொண்டர்கள் தலைமைக்கழகம் அருகே வந்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கற்களும் வீசப்பட்டன.

இதில் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் தாக்குபிடிக்க முடியாமல் பின் வாங்கி ஓட்டம் பிடித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் திரளான நிர்வாகிகள் புடைசூழ தலைமை கழகம் முனைப்பு வந்திறங்கினார். அப்போது அங்கே கூடியிருந்த தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க என்று கோஷமிட்டபடி அவரை தலைமை கழகத்தின் வளாகத்திற்குள் அழைத்து சென்றனர்.

அப்போது அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் மெயின் வாசல் பூட்டப்பட்டு இருந்ததால் இரும்பு கம்பியால் கதவு பூட்டை உடைத்து ஓ.பன்னீர்செல்வத்தை தலைமை கழகத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அ.தி.மு.க. கட்சிக்கொடியை கையில் ஏந்தியபடி ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்திற்குள் உள்ள தனது அறைக்கு சென்று தொண்டர்களை சந்தித்தார்.

அதன் பிறகு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர், முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News