கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்றாலும், கட்டுப்பாடுகள் தேவையில்லை.
- முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள், 5 சதவீதம் பேர் தான் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்
தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்றாலும், கட்டுப்பாடுகள் தேவையில்லை என அவர் கூறியுள்ளார். முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, தொற்று காரணமாக 40 சதவீதத்துக்கும் மேல் மருத்துவமனைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டால்தான், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லை என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.