உடுமலை வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம்- பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
- பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
- அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது.
இந்தநிலையில் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டுகிறது. இதனால் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளம் காரணமாக பஞ்சலிங்க அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.