பிரதமர் மோடி நாளை மதுரை வருகை- விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
- மோப்பநாய்கள் உதவியுடன் விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள், விமான நிலைய உள்வளாகத்திற்குள் நேற்று முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர், தனி விமானத்தில் மதுரை வருகிறார்.
மோடியின் வருகையை தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 2-வது நாளாக நேற்றும் கூட்டம் நடந்தது.
சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரி ஜிதேந்திரா சிங் பாக்சி தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், விமான நிலைய இயக்குனர் பாபுராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேசுவரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோப்பநாய்கள் உதவியுடன் விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள். அங்கு வரும் வாகனங்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிப்படுகின்றன.
விமான நிலையத்தின் வெளி பகுதிகளான கார்பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள், விமான நிலைய உள்வளாகத்திற்குள் நேற்று முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 12-ந்தேதியில் இருந்து வழக்கம்போல், பார்வையாளர்கள் உள்வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.