முறைகேடாக தங்கியிருக்கும் நைஜீரியர்களை பிடிக்க திருப்பூரில் வீடு வீடாக போலீசார் அதிரடி சோதனை
- நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோரும் தங்கி பனியன் தொழில் செய்து வருகின்றனர்.
- உரிய ஆவணங்களை பெறாமல் கட்டிடத்தை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை கூறினர்.
திருப்பூர்:
தொழில் நகரமான திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோரும் தங்கி பனியன் தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் ராயபுரம் பகுதியில் நைஜீரியர்கள் வீடு எடுத்து காதர்பேட்டை பகுதியில் பனியன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
அதில் ஒருசிலர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதால் திருப்பூர் மாநகர போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவதுடன், ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பவர்களை கைது செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின்பேரில் வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின்படி கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அணில்குமார் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் திருப்பூர் ராயபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி இருந்த பகுதியில் வீடு வீடாக சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் நைஜீரியர்கள் சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் வியாபாரம் செய்து வந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நைஜீரியர்களின் அடையாள அட்டை உள்பட எந்த விதமான ஆவணங்களையும் வாங்காமல் அந்த நைஜீரியர்களுக்கு கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கட்டிட உரிமையாளரை எச்சரித்ததுடன், அந்த கட்டிடத்தில் தங்கி இருந்தவர்களின் விபரங்களையும், ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். இதுபோன்று உரிய ஆவணங்களை பெறாமல் கட்டிடத்தை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை கூறினர். இதனிடையே திருப்பூரில் முறைகேடாக தங்கியிருக்கும் நைஜீரியர்களை பிடிக்க போலீசார் ராயபுரம் உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.