சிப்காட் போராட்டத்தில் விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது ஏன்?: காவல்துறை விளக்கம்
- விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
- குண்டர் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
செய்யாறு தாலுகா மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக்கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக விவசாயிகள் நிலம் கையகப்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடியுரிமை, வாக்குரிமை சம்பந்தமான ஆவணங்களை செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவிடம் அளிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முகப்பு வாயிலில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தொடர்ந்து அன்று மாலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவித்தும், மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த சப்-கலெக்டர் அனாமிகா அங்கு வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றார். இதற்கிடையே, அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 4-ம் தேதி அதிகாலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் (45) உள்பட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை பேரில் கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருள் (45), தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவன் (45), மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சோழன் (32), மேல்மா கிராமத்தைச் சேர்ந்த திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் (38) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.