வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து தவறான புள்ளி விவரம் வெளியீடு- ராமதாஸ் கண்டனம்
- தி.மு.க. அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது.
- அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி தி.மு.க. அரசு ஏமாற்றியிருக்கிறது.
ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50 சதவீதத்துக்கும் கூடுதலான பிரதி நிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க. அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. தி.மு.க. அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறையாக பின் பற்றப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவத்தின் விவரங்களை தமிழக அரசு வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசு நினைத்தால் அந்த விவரங்களை ஒரு வாரத்தில் திரட்டிவிட முடியும். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி சூறையாடல்கள் நடப்பதால் தான் அவை குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
வன்னிய மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும், மீண்டும் அந்த மக்களுக்கு துரோகங்களையும், சமூக அநீதியையும் தான் இழைத்து வருகிறது. அதனால் தான், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்கும் வகையில் பொய்யான, திரிக்கப்பட்ட, அரை குறையான புள்ளி விவரங்களை வெளியிடுகிறது.
உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக, பொம்மையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வன்னியமக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க. அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும்.