தமிழ்நாடு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் செந்தில்பாலாஜி ஆஜர்

Published On 2024-10-01 07:57 GMT   |   Update On 2024-10-01 07:57 GMT
  • சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
  • கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜரானார்.

2011-15-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும் எனவும் நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதி ஜெயவேல், வழக்கின் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News