தமிழ்நாடு

சபாநாயகர் அப்பாவு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டசபை கூடும்போது முடிவு தெரியும்- சபாநாயகர் பேட்டி

Published On 2022-09-05 15:26 IST   |   Update On 2022-09-05 18:06:00 IST
  • அ.தி.மு.க விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல.
  • தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

நெல்லை:

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சி. மணி மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சிகள் மூலம் அவரது வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

வ. உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் பாரதியார் 100-வது நினைவுதினம் ஆகியவையையொட்டி அவர்கள் 2 பேரும் படித்த பள்ளியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது.

வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது பெருமைப்படுத்த உரியதாக உள்ளது.

அ.தி.மு.க விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அ.தி.மு.க.வில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி, தவறு என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது.

இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. கொறடா கொடுத்த மனு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும். எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News