தமிழ்நாடு

அரசு பஸ்கள் மூலம் 1½ லட்சம் பயணிகள் சென்னை வந்தனர்: கோயம்பேடு, வடபழனியில் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-08-16 05:26 GMT   |   Update On 2023-08-16 05:26 GMT
  • தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நிரம்பி இருந்ததால் எழும்பூர், தி.நகர், தாம்பரம் நிலையங்களில் கூட்டம் மிகுதியாக இருந்தன.
  • கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சென்னை:

அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து நேற்று சுதந்திர தின விழா விடுமுறை கிடைத்ததால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் வெள்ளிக்கிழமை பயணத்தை மேற்கொண்டனர்.

சென்னையில் இருந்து பஸ், ரெயில், கார்களில் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பினார்கள்.

சென்னை திரும்ப வசதியாக பல்வேறு நகரங்களில் இருந்து வழக்கமான பஸ்களை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து அரசு பஸ்களில் சென்னை வருவதற்கு 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

இதே போல 3000 பேர் சென்னையில் இருந்து முன்பதிவு செய்து வெளியூர் புறப்பட்டு சென்றனர். சுமார் 1.5 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்து சென்னை திரும்பியுள்ளனர்.

இது தவிர ஆம்னி பஸ்களிலும் கூட்டம் நிரம்பி இருந்தன. 25 ஆயிரம் பேர் அதில் பயணம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்த பஸ்கள் இன்று அதிகாலை முதல் கோயம்பேடுக்கு வரத் தொடங்கின.

பெரும்பாலான பஸ்கள் தாம்பரம், கிண்டி, வடபழனி வழியாக வந்தன. இதனால் கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

காலை 7 மணி முதல் 9 மணி வரை அதிகளவில் பஸ்கள் வந்ததால் நெரிசல் காணப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதே போல தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நிரம்பி இருந்ததால் எழும்பூர், தி.நகர், தாம்பரம் நிலையங்களில் காலையில் கூட்டம் மிகுதியாக இருந்தன.

Tags:    

Similar News