பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவு பஸ்களில் 22 ஆயிரம் பேர் முன்பதிவு
- தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
- கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நோக்கி மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.
16, 17 ஆகிய நாட்கள் மாட்டு பொங்கல், உழவர் தினம் விடுமுறை நாட்களாகும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து பொங்கல் திங்கட்கிழமை வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட மக்கள் முடிவு செய்து பயணத்தை திட்டமிடுகின்றனர்.
இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இந்த 2 நாட்களிலும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். அதனால் அரசு பஸ்களில் இடங்கள் நிரம்பின. முதலில் 250 பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டன.
அதனை தொடர்ந்து மேலும் 300 பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இடங்கள் நிரம்ப நிரம்ப பிற போக்குவரத்து கழக பஸ்கள் முன்பதிவு செய்யப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கூறினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி (திங்கட்கிழமை) வருவதால் அதனோடு மேலும் 2 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். 23-ந்தேதி பயணம் செய்ய 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் 18 ஆயிரம் பேர் சென்னையில் இருந்த செல்ல பதிவு செய்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்பதிவு பெரும்பாலான அரசு பஸ்களில் முடிந்து விட்டன.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.